வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

பூபதி என்னையும் இந்தப் பதிவுத் தொடரில் இணைத்தமைக்கு நன்றி. ஏதோ என்னால் முடிந்ததை எழுதியிருக்கின்றேன்.

மணிமேகலா அவர்கள் அளவைகள் பற்றி எழுதியதையும் அதற்குரிய பதிலையும் பார்த்துவிட்டு அளவைகள் பற்றி ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். தேடலின் விளைவாக இந்தப் பதிவு. மணிமேகலா முகத்தல் என்பது பற்றி எனக்கு மேலதிக தகவல்களை திரட்ட முடியவில்லை. வேறு யாராவது முகத்தல் அளவைபற்றி தெரிந்தவற்றை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.

நீட்டல் அளவை


காதம் - 10 மைல்
ஓசனை - 4 காதம்
கல் - 1 மைல் (1609 மீட்டர்)
முழம் - முழங்கை முதல் நடுவிரல் நுனி வரை
சாண் - கட்டை விரல் நுனி முதல் சிறு விரல் நுனி வரை
ஒட்டைசாண் - கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் உள்ள இடைவெளி
சாட்கோல் - சாண் அளவுள்ள கோல்
அங்குட்டம்- கட்டை விரல் நீளம்
அடி- 12 அங்குட்டம்
காசாகிரம் - மயிர் நுனியளவு
ஆள் - மனிதனுடைய உயரம்
சேன் - உயரம் / நீளம்

நிறத்தல் அளவை

ஆழாக்கு - 1/8 படி
செவிடு - 1/5 ஆழாக்கு
சேர் - 5 ஆழாக்கு
வீசை - 1400 கிராம்ஸ்
இடா- முகத்தல் அளவை
உழக்கு - 1/4 படி
சின்ன படி - 1/2 படி
பக்கா - 2 படி (தோரயமாக 2 லிட்டர்)
வட்டி- 1 படி
வல்லம் - 2 அல்லது 4 படி
எத்துனை - எள் அளவு
கஃசு - 1/4 பலம்
பலம் - தோரயமாக 35 கிராம்ஸ்
ராத்தல் - 13 பலம்
கோட்டை - 21 மரக்கால்
கலம் - 12 மரக்கால்
தூணி - 8 மரக்கால்
பறை - 6 மரக்கால்
கலரை - 1 1/2 மரக்கால்
குருணி (மரக்கால்) - 8 படி

பரப்பளவு

குண்டு - 1089 சதுர அடி
குழி - 144 சதுர அடி
மா - 100 குழி
வேலி - 20 மா (6.67 ஏக்கர்)



கால அளவு


கற்பம் (கல்பம்) - பிரம்மாவின் ஒரு நாள் - 4,32,00,00,000 வருஷம்
பதுமகற்பம் - பிரம்மாவின் வாழ்க்கையின் முதல் பகுதி
உரி - அரை நாழி
கன்னல் (நாழிகை) - 24 நிமிடங்கள்
கணம் - நொடிபோழுது, கண் இமைக்கும் நேரம்
படலம் - செயல் நடக்கும் நேரம்
யாமம் - 3 மணி நேரம் - 7 1/2 நாழிகை
மண்டலம் - 40/41/45 நாள்கள்
மாமாங்கம் - 12 வருடங்கள்

இதெல்லாம் தேடலில் கிடைத்தவை.

எமது உறவுமுறைகள் பற்றி யோசித்தபோது சில உறவுமுறைகளில் நாம் பயன்படுத்திய சொற்கள் மாற்றமடைந்து அல்லது மருகிவிட்டமை தெரிகின்றது.

இவைகள் போன்று நட்புடன் ஐமால் கூறியதுபோல் அம்மா என்ற சொல்லும் மருகிவிடுமோ என்ற கேள்வியும் எழுந்தது.

உதாரணமாக பெற்றோரின் பெற்றோர்களை பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி என்றெல்லாம் முன்பு அழைத்தார்கள் ஆனால் இன்று அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா என மாற்றமடைந்துள்ளன.

இதேபோல் பெற்றோரின் உடன் பிறந்தவர்களையும் பெரியப்பு, சின்னப்பு என்ற அழைக்கப்பட்டவர்கள் பின்பு பெரியையா, சின்னையா என்றும் இன்று பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, சித்தி என்ற உறவுப்பெயரில் அழைக்கப்படுகின்றாhர்கள்.

தாத்தா பாட்டியுடன் வாழ்கின்ற கொடுப்பனவு இருக்கின்றவர்கள் அவர்களது பேச்சில் பயன்படுத்தப்படும் தூய தமிழ்ச் சொற்களை வியக்கத்தக்க அளவில் அறியமுடியும்.

தாத்தாவும் பாட்டியும் மட்டுமல்ல அம்மாவும் அப்பாவும்கூட என்னருகில் இல்லை. தனிநபர் வாழ்வில் அதிகமாக என்னால் எதையும் காணமுடியவில்லை. மன்னித்துவிடுங்கள்.

ஆனாலும் ஓர் நல்ல முயற்சியை எமது நட்பு வட்டத்துக்குள் ஆரம்பித்துவைத்த ராகவன் சாருக்கு மிக்க நன்றிகள்.

மிக குறைவான நேரமே வலைத்தளங்களில் என்னால் செலவிடமுடிகின்றது. அதனால் பூபதியின் வலைத்தளத்திற்கு வருகை தருவதும் அவருக்கு வரும் பின்னோட்டங்களை பார்வையிடுவதும் பின்னோட்டங்கள் இடுபவர்களது வலைத்தளங்களை நோட்டம் இடுவதுமே எனக்கும் வலைக்கும் இடையேயான தொடர்பு.

எமது நட்பு வட்டத்திற்குள் புதிதாக சிலரை தெரிவு செய்ய வேண்டும். இதோ இவர்களை தொடர் பதிவை இடும்படி அன்போடும் அவர்களது பதிவுகளை வாசிக்கத்துடிக்கும் ஆசையுடனும் கேட்டுக் கொள்கின்றேன்.

திகழ்மிளிர்: மிளிரும் எண்ணங்களின் சொந்தகாரர்


மணிமேகலா: ஆர்ப்பாட்டம் இல்லாத அறிவு

அறிவுமுகம்: முகம் காணத் தூண்டும் நேயம்

கமல்: நேர்மையான எழுத்தும் நியாயமான பார்வையும்

குறிப்பிட்ட நண்பர்கள் தமது பதிவில் இன்னும் புதிய நண்பர்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

திங்கள், 16 பிப்ரவரி, 2009

காலை வணக்கம்


காலை வணக்கம் சொல்லுவோம் உள்ளன்போடு


வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை


நன்றி அறிவுமதி

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

இங்கு இடப்பட்டிருக்கும் கவிதைகள் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருக்கின்றன. இவை உங்களையும் கவரலாம்..! படித்துப் பாருங்களேன்..!

உலகம்

சிரியுங்கள்...
இந்த உலகம்
உங்களுடன் சிரிக்கிறது...
அழுங்கள்...
நீங்கள் மட்டுமே
அழுகிறீர்கள்...
பாடுங்கள்...
அந்த
மலைகளும் உங்களுக்குப்
பதிலளிக்கின்றன...
பெருமூச்செறியுங்கள்...
அவைக்
காற்றினில்
காணாமல் போகின்றன...
கொண்டாடுங்கள்...
உங்கள் வீட்டில்
ஓராயிரம் நண்பர்கள்...
கவலைப்படுங்கள்...
உங்கள் வீட்டில்
தூண்கள்கூட இல்லை...
வாழ்வின் அமுதங்களை
நாம்
எல்லோருடனும்
பங்கிட்டுக்கொள்ளலாம்...
ஆனால்-
நம்மின் சோகத்தை
நாம் மட்டுமே விழுங்கவேண்டும்...
விருந்தளியுங்கள்...
உங்கள் அறை
அமர்க்களப்படுகிறது...
கையேந்துங்கள்...
எங்கும்
மனிதர்களே
தென்படமாட்டார்கள்...
வாழ்வின் வெற்றி
உங்களை வாழச்செய்கிறது...
ஆனால்-
அதன் தோல்வி
உங்களை சாகடிப்பதில்லை...
ஆழப்பதியும்
அறிவுரை வழங்குகிறது...
இன்று வரும்
துயரங்களைக் கண்டு
ஓடி ஒளிந்தால்
நாளை
நம் முகவரி விசாரித்து வரும்
இன்பங்களை
யார் வரவேற்பது...?
நம்பிக்கை கொள்ளுங்கள்...!
அதுவே
எல்லாவற்றையும் வெல்லும்
அருமருந்து!

-புஹாரி-


--------------------------------------------------------------------------------


கோபம்

உன்னை நானும்
என்னை நீயும்
விழுங்கிவிடுவதாய்க் கருதிய
எச்சரிக்கையின் இறுக்கங்களை
நம் முகங்களில் படரவிட்டு
ஒருவரையொருவர் நம்பாமலேயே
ஒரு நீண்ட பயணம் முடித்து
விரோதத்திற்கும் நட்பிற்கும் இடையே
நாம் விலகிநின்று
பரஸ்பரம் சிரித்துக் கொள்கையில்
கூடவே நம்மைப் பார்த்து
கைதட்டி சிரித்துப் போகும்
நாம் நழுவவிட்ட காலங்களும்!

-யாரோ-

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

உங்கள் புத்தர் இதையா சொன்னார்?

காலச்சுவடு மாதாந்த சஞ்சிகையை விரும்பி வாசிப்பது உண்டு. கடந்த மாத இதழில் கவிதா எழுதிய இந்த கட்டுரையின் யதார்த்தம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நீங்களும் வாசித்து விடுங்கள். “தமிழராக இருப்பதாலேயே தமிழர்கள் கொல்லப்படுவதற்கும் சிங்களர்கள் கொல்லப்படுவதற்கும் வித்தியாசம் இல்லையா?” நிதர்சனமான் வார்த்தை அல்லவா?

தார்ச்சாலையில் சுள்ளென்று எரியும் சூரியனின் வெப்பத்தைப் போல இலங்கையின் வீதிகளில் பயம் பரவியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களிலுமே பாதுகாப்பு வளையங்களுக்குள் சென்று பிரச்சினையின்றி மீள்வதற்காக மக்கள் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது அன்றாட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. பாதுகாப்புச் சோதனைகளுக்கான திட்டமிடுதலின்றி இலங்கையில் ஒரு பயணத்தை மேற்கொள்வது சாத்தியமல்ல.
இலங்கைப் பிரச்சினையை - உள்நாட்டு யுத்தத்தை, தமிழரின் துயரங்களை இந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பதற்கும் இலங்கைக்குச் சென்று நேரடியாகப் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்; கடத்தப்படுகின்றனர்; துன்புறுத்தப்படுகின்றனர். ஆனால் தமிழகத்தில் சித்தரிக்கப்படுவதுபோல வன்னியிலோ வட இலங்கையிலோ மட்டுமல்ல; இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் குறிப்பாக கொழும்பிலுமே இதுதான் நிலமை. வட இலங்கையில் போர் நடப்பதால் துன்பம் அதிகம்.

மிக அன்யோன்யமாகவும் நேசமாகவும் தெரியும் கொழும்பு வீதிகளின் வேறொரு முகத்தை ஒரு நிருபராகப் போனால் மட்டுமே களைந்து எடுத்துக் காண முடியும் எனத் தோன்றுகிறது. கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் ஏற்பாட்டில் நான் சந்தித்த தமிழ்க் குடும்பங்களின் துயரங்களைச் சொல்லி மாளாது. போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்குவந்த 2005ஆம் ஆண்டிலிருந்து மிகச் சமீபகாலம்வரை இலங்கையில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,000. கொழும்பில் மட்டும் 300 இளைஞர்கள் கடத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் சிலரது குடும்பங்களை அவர்கள் இலங்கையைவிட்டுக் கிளம்புவதற்கு முதல்நாள் சந்திக்க நேர்ந்தது. என் தோற்றத்தை வைத்து நான் ஏதாவதொரு அதிகாரியாக இருக்கக்கூடும் என்னும் ஊகத்தில் அவர்கள் என்னிடம் கைகூப்பிக் கதறித் தங்கள் குடும்பத்து இளைஞர்களை மீட்டுத்தரும்படி கெஞ்சியதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. வாழ்வுடனான போராட்டத்தில் மரணம் என்பது ஒரே ஒரு தோல்விதான். ஆனால் மரணம் தவிர்த்த வேறு வழிகளில் தங்கள் குடும்ப வரைபடங்களிலிருந்து நீக்கப்பட்டவர்களின் நினைவுகளோடு இருப்பதிலும் மீட்கப் போராடுவதிலும் வாழ்க்கை அவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடித்துக்கொண்டேயிருக்கிறது.

வெள்ளை வேன் கடத்தல்கள் எனப் பரவலாக அறியப்படும் இக்கடத்தலை யார் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தலைநகர் கொழும்பில் பாதுகாப்புச் சோதனைகள் பலவற்றை மீறி நடைபெறும் இக்கடத்தல்களுக்கு அரசின் ஆதரவு இருக்கிறது என்னும் தமிழ்த் தலைவர்களின் குற்றச்சாட்டுகளை நம்பாமல் இருக்க முடியவில்லை. அந்த இளைஞர்களுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்றுதான் அவர்கள் கடத்தப்படுகிறார்கள் என்கிறார்கள் தமிழ்த் தலைவர்கள். பல நேரங்களில் கடத்தப்பட்டவர்கள் திரும்புவதில்லை. அதிர்ஷ்டவசமாகத் திரும்புபவர்கள் அதற்குக் கொடுக்க வேண்டிய விலை, சில லட்சம் பணம், 24 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம். பணம் கொடுக்க முடியாததாலும் நாட்டை விட்டு வெளியேறும் அளவுக்குப் பணம் இல்லாததாலும் மீள முடியாமல் சாவின் நுனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் அதிகம். தமிழ் பேசும் ஓர் இளைஞனாய் இலங்கையில் இருப்பது சாபம்.

சென்னையைத் தலைமையிடமாகக்கொண்ட ஒரு பிரபல ஓட்டலின் கிளை கொழும்பில் இருக்கிறது. அந்தக் கிளையின் மேலாளருக்குக் கிட்டத்தட்ட சென்னையில் பணிபுரியும் ஊழியர்களின் அளவுக்குச் சம்பளமும் சலுகைகளும் உண்டு. இரண்டுக்குமே பேர்போனது அந்த ஓட்டல் நிர்வாகம். இருந்தும் மேலாளர் கனடாவுக்குப் போவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். நான் அங்கே தங்கியிருந்த பத்து நாட்களில் ஏற்பட்ட பரிச்சயத்தில் அவர் கனடா போவது பற்றிப் பகிர்ந்துகொண்டார். “இங்கே சம்பளம், சலுகைகள் எல்லாம் கிடைப்பது உண்மைதான். ஆனால் வாழ்தல் பற்றிய பயம் இருக்கிறது. இப்போது எதுவும் நடக்கவில்லை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.

உண்மை பேசும், உண்மை பேச வேண்டிய ஊடகவியலாளர்களின் நிலமையும் இலங்கையில் மோசம். ஓர் ஊடகவியலாளராகப் பணிபுரிய மிக ஆபத்தான நாடுகள் என்று உலக அளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் நான்கு நாடுகளில் இலங்கையும் ஒன்று. 2005இலிருந்து கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 16. பெரும்பாலானவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள். நான் சந்திக்க நேர்ந்த ஒரு தமிழ் ஊடகவியலாளர் தனது வீட்டிற்கும் அலுவலகத்திற்குமிடையில் உள்ள மூன்று கிலோமீட்டர் தொலைவைக் கடக்க 18 வழிகள் வைத்திருக்கிறார். வாழ்தல் சார்ந்த பயங்கள். வேறொரு தமிழ் ஊடகவியலாளர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அலுவலகத்திலேயே தங்கியிருக்கிறார். அலுவலகத்தைவிட்டு வெளியேறினால் அவரது உயிருக்கு உத்திரவாதம் இல்லை. கணக்கற்ற ஊடகவியலாளர்கள் தங்களது கருத்துச் சுதந்திரத்தின் பொருட்டுக் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஒரு சிலர் இன்னும் சிறையிலேயே இருக்கின்றனர். ஊடக சுதந்திரம் அங்கே மருந்துக்கும் இல்லை. ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதிலும் காணாமற்போவதிலும் அரசு கவனம் செலுத்தாததாலேயே விசாரணை நடத்தாததாலேயே இம்மாதிரி சம்பவங்களில் அரசுக்கு இருக்கக்கூடிய பங்களிப்பும் மிக முக்கியமானது.

பத்து நாள் பயணத்தில் நான் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆட்டோ ஓட்டுநர் ஒருவருடைய தாய் தமிழர்; தந்தை சிங்களர். “சகஜமாகத் தமிழ் பேசத் தெரியும். ஆனால் பேசமாட்டேன். என் தந்தை சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் என் பாதுகாப்பு” என்றார். ஒரு வெளிநாட்டுச் செய்தியாளராக மிக வெளிப்படையாக நான் உணர்ந்த ஒரு விஷயம், கொழும்பில் எல்லாத் தமிழர்களும் சிங்களம் பேசுகிறார்கள். தமிழர்களாக அங்கு இருப்பதே பாதுகாப் பற்றது என்னும் நிலையில் அவர்கள் சிங்களம் கற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் சிங்களத் தவர்களில் பெரும்பாலானோருக்குத் தமிழ் தெரிவதில்லை.

கொழும்பு தவிர கிழக்கு மாகாணத்துக்குப் போக மட்டுமே எனக்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்தது. கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டும் யாழ்ப்பாணம் உள்பட வேறு எங்கும் போக முடியவில்லை. அப்போதுதான் யாழ்ப்பாணத்துக்குப் போக முயன்ற இன்னொரு குடும்பம் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் தங்கியிருந்த விடுதியிலேயே அந்தக் குடும்பமும் தங்கியிருந்தது. பெற்றோருக்கு லண்டன் பாஸ்போர்ட் என்பதால் யாழ்ப்பாணத்திற்குப் போக அனுமதி மறுக்கப்பட்டது. மகள் மட்டும் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால் சென்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஓட்டல் ஊழியர் ஒருவர் சொன்னார்: “வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் உங்கள் அரசுகள் உலுக்கி எடுத்துவிடும். இங்குள்ள தமிழர்களின் நிலை அப்படியல்ல. நாய் போலச் சுடப்பட்டாலும் எங்களுக்காகக் குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள்?”

தமிழ்த் தலைவர்களைத் தாண்டி சாதாரணத் தமிழர்களுக்குக்கூட இந்தியாவின் மீதும் தமிழகத்தின் மீதுமுள்ள நம்பிக்கையும் அன்பும் அசாதாரணமானவை. நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் எனத் தெரிந்ததும் என்னிடம் பணம் வாங்க மறுத்துவிட்டார் தமிழ் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர். “நாங்கள் வேறு எப்படி நன்றி சொல்ல?” என்று அவர் கேட்ட மிகச் சிறிய கேள்வியில் எனது பயணத்தின் சுமை மிக அதிகமாகக் கூடிப்போனது. அவருக்குச் சொல்ல என்னிடம் எந்த நம்பிக்கை வார்த்தைகளும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பது வெறும் அரசியல் தான் என்று எப்படிச் சொல்ல?

‘மிகவும் வருத்தத்திற்குரியது நல்லவர்களின் மௌனம்தான்’ என்றார் மார்ட்டின் லூதர் கிங். அதை இலங்கையில் நேரடியாக உணரும் வாய்ப்புக் கிடைத்தது. பணி நிமித்தம் பலதரப்பட்ட ஊடகவியலாளர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களுள் சிங்களப் பத்திரிகையாளர்களும் இருந்தார்கள். பொதுவாக அவர்கள் தமிழர்களின் நிலை குறித்து அனுதாபத்தோடும் இலங்கையில் நிலவும் சூழல் பற்றிய கவலையோடும் இருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி இளம் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவருக்குத் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் பற்றிப் பயங்கரக் கோபம் இருந்தது. அந்தப் போராட்டங்களிலிருந்து எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்தபோதிலும் இந்தியா தலையிட வேண்டும் என எப்படி நீங்கள் கேட்கலாமென என்னிடம் தொடர்ந்து வாதாடிக்கொண்டிருந்தார். “எங்கள் நாட்டில் நடப்பது அநியாயம்தான். ஆனால் அதற்காக நீங்கள் எப்படி எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியும்? உங்கள் நாட்டில் மும்பைக் கலவரங்களுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் மோசமாக நடத்தப்பட்டால் பிற இஸ்லாமிய நாடுகளைத் தலையிட அனுமதிப்பீர்களா?” என்று கோபமாகக் கேட்டார். “அப்படி ஒரு விஷயம் இந்தியாவில் நடந்தால் அதை எங்கள் நாட்டுக்குள் எதிர்க்க முடியாத நிலை இருந்தால் இஸ்லாமியர்களுக்காகப் பிற நாடுகள் குரல் கொடுப்பதில் ஒரு மனிதாபிமானி என்னும் அடிப்படையில் எனக்கு ஆட்சேபனை இருக்காது” எனச் சொன்னேன். அவருக்கு விளங்கவில்லை, “இங்கே சிங்களர்களும் கொல்லப்படுகிறார்கள் தெரியுமா?” என்றார். “தமிழராக இருப்பதாலேயே தமிழர்கள் கொல்லப்படுவதற்கும் சிங்களர்கள் கொல்லப்படுவதற்கும் வித்தியாசம் இல்லையா?” என்று நான் கேட்டபோது அவரிடம் பதில் இல்லை. “என்ன இருந்தாலும் இது எங்கள் உள்நாட்டு விவகாரம்” என்று மீண்டும் வலியுறுத்தினார். “இந்தியா தலையிட வேண்டுமென்பது எங்கள் நாட்டுத் தமிழர்களின் விருப்பம்தான். ஆனால் குவியல் குவியலாகச் செத்துக் கொண்டிருக்கும் உங்கள் நாட்டுத் தமிழர்களுக்கு அது விருப்பம் மட்டுமல்ல, வாழ்வியல் பிரச்சினை. முதலில் அது அவர்களின் கோரிக்கை. பிறகு எப்படி அது உள்நாட்டுப் பிரச்சினையாகும்?” என்று நான் கேட்ட பிறகு அவர் அமைதியானார். எனக்குத் தெரியும், இப்போதும் அவருக்கு இந்தியா தலையிடக் கூடிய நிலை பற்றி வருத்தங்களும் கோபங்களும் இருக்கும் என்று. அவர் இத்தனைக்கும் தமிழர்களுக்கு ஆதரவான பத்திரிகையாளராக அறியப்பட்டவர். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் இனத்தைவிட நாட்டின் இறையாண்மை முக்கியம் என அவரைப் போலப் பல சிங்கள இளைஞர்களும் நினைக்கக்கூடும்.

பௌத்தம், இந்தியா உலகுக்கு அளித்த மிகப் பெரிய கொடை. பெரிய அளவில் இந்தியாவில் அது செழித்து வளராவிட்டாலும் தலித்துகள் போன்ற ஒடுக்கப்பட்டவர்களின் புகலிடமாகப் அது இருப்பதற்குக் காரணம், அது வலியுறுத்தும் தத்துவங்களான அன்பும் அகிம்சையும். ஆனால் இலங்கையில் போரை ஆதரிப்பவர்களில் முக்கியமானவர்கள் பௌத்த பிக்குகள். தீவிர இனஉணர்வுகொண்ட பௌத்த பிக்கு ஒருவரைச் சந்தித்தால் என்ன என்று நண்பர் ஒருவர் கேட்டார். அத்தகைய சந்திப்பு நடக்காமல் போனதற்குக் காரணம் நேரமின்மை தவிர்த்து என்னுடைய தயக்கமும்கூட. “உங்கள் புத்தர் இதையா சொன்னார்?” என அவரிடம் எப்படிக் கேட்பது?